கீர்த்தனை தந்த கவிஞர் சந்தியாகு ஐயர்
*கீர்த்தனை தந்த கவிஞர் சந்தியாகு ஐயர் வே (1869 – 1929) வரலாற்றுக் குறிப்பு*

அருள்திரு வே . சந்தியாகு மதுரைக்கு அருகிலுள்ள சிலுக்குவார் பட்டியில் பிறந்தவர் . திருவண்ணாமலை பகுதிகளில் போதகர்களாகப் பணியாற்றிய பென்யமீன் ஐயரும் , மாசிலாமணி ஐயரும் இவரது சகோதரர்கள் .
பசுமலையில் ஆசிரியராகவும் , மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கணிதப் பேராசிரியராகவும் பணியாற்றியவர் .
பசுமலை இறையியல் பள்ளியில் சில ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் ஆயராக அருட்பொழிவு பெற்று வத்தலகுண்டு ஆயராகப் பொறுப்பேற்றார் . H . A . பாப்லி ஐயரின் நண்பராக விளங்கினார் . சந்தியாகு ஐயர் இறைப்பணியோடு சமுதாயப் பணியையும் மேற்கொண்டார் . ஊராட்சி மன்ற தலைவராகவும் விளங்கினார் .
திருச்சபையின் பல்வேறு உயர் மட்ட பொறுப்புகளையும் சந்தியாகு திறம்பட வகித்துள்ளார் .
1919 இல் தென்னிந்திய ஐக்கியத் திருச்சபையின் நடுவராகப் பொறுப்பேற்றுத் திறம்படச் செயலாற்றினார் .
இந்த உலகத்தை இயேசுவுக்கு அன்பின் வழியில் சொந்தமாக்க முயன்ற சந்தியாகு அற்புதமான பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளார் . அவற்றுள் சில
‘ அருமை ரட்சகா கூடி வந்தோம் ‘
‘ இயேசு நான் நிற்கும் கன்மலையே ‘
‘ தந்தேன் எனை இயேசுவே ‘
‘ தாசரே இத்தாரணியை அன்பாய் ‘
‘ தேவனே நான் உம தண்டையில் ‘
” நித்தம் முயல் மனமே ‘ ‘ வரவேணும் பரனாவியே ‘
‘ விந்தைக் கிறிஸ் தேசு ராஜா ‘
எதுகை , மோனை போன்ற அலங்காரங்களை விட பொருளுக்கு முதலிடம் தந்தவர் சந்தியாகு .
இவருடைய பாடல்களில் சில ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டவை .
‘ விந்தை கிறிஸ்தேசு ராஜா ‘
( When I survey The Wondrous cross )
தேவனே நான் உமதண்டையில்
( Nearer my God to Thee )
ஆகியன அவற்றுள் குறிப்பிடத்தக்கவை .
மேனாட்டுப் பண்களில் அமைந்த பாடல்களை இனிய தமிழ்ப்பாடல்களாக வடித்தெடுத்து தமிழ் நெஞ்சங்களில் விதைத்த பெருமைக்குரியவர் சந்தியாகு .
சந்தியாகு இயற்றிய *’ தாசரே இத்தாரணியை அன்பாய் ‘* எனத் தொடங்கும் பாடல் எளிமையான பாடல் . சமூக விடுதலையை முன்னெடுக்கும் பாடல் .
இப்பாடலை டாக்டர் D . T . நைல்ஸ் , ( ‘ Slaves of Christ , Tis mercy we remember ‘ ) ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார் இப்பாடலின் ஒரு சரணம்
பின்வருமாறு :
நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம்
பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே.
————————————————————
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது …
————————————————————
Credits – Manna Selvakumar, *Tinnevelly Christian Historical Society*
————————————————————
