கீர்த்தனை கவிஞர் அருள்திரு வே மாசிலாமணி ஐயர்

கீர்த்தனை கவிஞர் அருள்திரு . வே . மாசிலாமணி ஐயர் வரலாற்றுக் குறிப்பு
மதுரை மாவட்டத்திலுள்ள சிலுக்குவார்பட்டி என்னும் கிராமத்தில் அருள்திரு . வே . மாசிலாமணி 1858 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது பாட்டனார் ஆங்கிலேயர்களது படையில் சிப்பாயாகப் பணிபுரிந்தவர், மாசிலாமணியின் தந்தையார் வேதமுத்து ரோமன் கத்தோலிக்கக் கிறிஸ்தவர். இவர் பல்வேறு காரணங்களுக்காகச் சீர்த்திருத்தச் சபைக் கிறிஸ்தவராக மாறினார். இதனால் கத்தோலிக்கர்கள் பல துன்பங்களை வேதமுத்துவுக்குக் கொடுத்தனர். இவர் ஆசிரியராகவும், நாட்டு மருத்துவராகவும் நிலக்கோட்டையிலும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் பணியாற்றி வந்தார். வேதமுத்துவுக்கு நான்கு ஆண்களும், இரண்டு பெண்களுமாக மொத்தம் ஆறு குழந்தைகள். இவர்களில் மூத்தமகன் வே . மாசிலாமணி ஆவார். தந்தையாரின் விருப்பத்திற்கிணங்க ஆண்மக்கள் நால்வரும் திருச்சபைப் போதகர்களாகப் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாசிலாமணி 1890 ஆம் ஆண்டு திருக்கோவிலூரிலுள்ள சீலோவாமில் இறைப்பணியாற்றிவந்த மிஷனெரிமார்களுக்கு உதவியாக இருந்ததுடன், அவ்விடங்களில் இறைப்பணியும் ஆற்றி வந்தார் . இக்கால கட்டத்தில் இயேசு கிறிஸ்துவைத் துதித்துப் பாடக் கீர்த்தனைகளை இயற்றினார். எனினும் இவர் இரட்சிப்பின் அனுபவத்தை அடையவில்லை. 1892 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆலய ஆராதனையில் அருள்திரு . என்.பி. ஹான்சன் என்னும் மிஷனெரி கூறிய ” எல்லோரும் பிரசங்கம் பண்ணலாம்; ஆனால் எல்லோரும் சாட்சி சொல்வது முடியாது என்னும் வார்த்தைகள் இவருடைய மனதை வேதனைக்குள்ளாக்கின உணவு உண்ண முடியாமல் மன அமைதி இழந்து துன்ப மடைந்தார். தமது மனைவியை அழைத்து தனக்காக ஜெபம் பண்ணக் கூறினார். அம்மையார் ‘ ‘ வருத்தப்பட்டுப் பாரஞ் சுமப்பவர்களே நீங்கள் என்னிடத்தில் வாருங்கள் . நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் ( மத்தேயு 11 : 28 ) என்னும் வசனத்தை விளக்கித் தன் கணவருக்காக ஜெபம் செய்தார் . மாசிலாமணியின் மனவருத்தத்தைக் கேள்விப்பட்ட இவரது நண்பர் ” பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும் . என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை ‘ ‘ ( யோவான் 6 37 ) என்னும் வசனத்தைச் சுட்டிக் காட்டி ஜெபம் பண்ணினார் . பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும் , சமாதானத்தையும் ஜெபம் முடிந்தவுடன் பெற்றார்.
அச்சூழலில் , பாவி என்னிடம் வரமனதில்லையா ? – ஓ பாவி என்னிடம் வரமனதில்லையா?
என்னும் மோகன இராகத்தில் அமைந்த கீர்த்தனையை இயற்றிப்பாடி மகிழ்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்தினார் . இவர் வயலின் வாசிப்பதில் மிகவும் திறமையானவர் . வயலின் இசை மூலம் பாடல்கள் பாடி அருளுரை ஆற்றுவது இவரது வழக்கமாகும் .
1897 இல் மீண்டும் மதுரை அமெரிக்கன் மிஷனுக்குச் சென்று ஊழியம் செய்தார். மதுரையில் 1901 ஆம் ஆண்டு போதகராக அபிஷேகம் பண்ணப்பட்டு 1906 வரை அங்கு இறைவனுடைய ஊழியத்தைச் செய்து வந்தார் . 1906 ஆம் ஆண்டு முதல் உபதேசிகர்களின் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார் . பின்னர் 1915 ஆம் ஆண்டு சாரோனில் ( திருவண்ணாமலை ) போதகராகப் பொறுப்பேற்று 1917 வரை பணியாற்றினார். பின்னர் 1917 முதல் 1920 வரை செங்கல் மேட்டில் இறைப்பணியாற்றினார் . மீண்டும் சாரோனுக்குப்பணிமாற்றம் செய்யப்பட்டு 1929 வரை அங்குப் போதகராக ஊழியம் செய்து ஓய்வு பெற்றார் .
இவருடன் பிறந்தவர்கள் அருள்திரு . பென்யமீன் , அருள்திரு . சந்தியாகு ஆகியோராவர் .
கீர்த்தனைகள்
1 . ஆர் இவர் ஆராரோ
2 . ஆனந்தமே ஜெயா ஜெயா
3 . உதவி செய்தருளே ஒருவருக்கொருவர்
4 . ஓ ! தாகம் மிகுந்தவரே , அமர்ந்த தண்ணீரண்டை
5 . சமயமிது நல்ல சமயம்
6 . சீர்மிகு வான்புவி தேவா தோத்ரம்
7 . தந்தானைத் துதிப்போமே
8 . தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம் வாறேன்
9 . பாவி என்னிடம் வர மனதில்லையா
- வந்தனம் வந்தனம்
- விலைமதியா இரத்தத்தால் மீட்கப்பட்டீரே
என்பன அருள்திரு . வே . மாசிலாமணி இயற்றிய கீர்த்தனைகளாகும்.
இவற்றுள் உதவி செய்தருளே ஒருவருக்கொருவர் ‘ ‘ என்னும் கீர்த்தனை ஆசிரமப் பாமாலை என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது . இத்தகைய சிறப்பான கீர்த்தனைகளை இயற்றி , திருவண்ணாமலைப் பகுதிகளில் பாடலுடன் நற்செய்திப் பணியாற்றி வந்த அருள்திரு . வே . மாசிலாமணி 1932 இல் காலமானார். ஜீவன் சுகம் பெலன் யாவுக்கும் தோத்ரம் தினம் தினம் அருள் நன்மைக்காகவும் தோத்ரம் ஆவலுடன் தோத்ரம் உனது அன்பினுக்கே தோத்ரம் மாநேசா
Credit: Manna Selvakumar, திருநெல்வேலி கிறிஸ்தவ வரலாற்று சங்கம்
