கண்டேனென் கண் குளிர – கிறிஸ்மஸ் பாடல் வரலாறு

ஆபிரகாம் பண்டிதர் 1859 ஆம் ஆண்டு தென்காசிக்கு அருகிலுள்ள சாம்பவர் வடகரை எனும் ஊரில் பிறந்தவர் .
பள்ளி ஆசிரியராகத் தம்முடைய பணியைத் தொடங்கிய ஆபிரகாம் பண்டிதர் பின்னாளில் மருத்துவத் துறையிலும் இசைத்துறையிலும் ஈடு இணையற்ற புகழ் பெற்றார் .
திண்டுக்கல்லைச் சேர்ந்த சடையாண்டிப் பத்தரிடம் இசையையும் , சுருளிமலைப் பகுதியில் வாழ்ந்த கருணானந்த மகரிஷியிடம் மருந்து செய்யும் முறையையும் கற்றுத் தேர்ந்தார்.
தஞ்சை சென்ற ஆபிரகாம் பண்டிதர் அங்கு சில காலம் ஆசிரியப் பணி ஆற்றிவிட்டு பின்னர் மருத்துவப் பணியில் முழு ஈடுபாடு காட்டி உழைத்து வந்தார் .
1899இல் விவசாயப் பண்ணை ஒன்றனை நிறுவி ஏராளமான மூலிகைகளைப் பயிரிட்டார் . வேளாண்மை துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட இவர் , புதிய ஒட்டு ரக கரும்பைக் கண்டுபிடித்தார் .
மருத்துவத் துறையில் ஆபிரகாம் தயாரித்த சஞ்சீவி மருந்துகள் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தன . பொருள் ஈட்டுவதற்கும் வாய்ப்பினை ஏற்படுத்தின . வேளாண்மைத் துறையிலும் மருத்துவத் துறையிலும் அவர் ஆற்றிய பணிக்காக , அவருக்கு ‘ இராவ் சாகிப் எனும் விருதை 1909ல் அரசு வழங்கியது .
தமிழ் இசை இயக்கத்தின் தந்தையாகப் போற்றப்படுபவர் ஆபிரகாம் பண்டிதர் . தமிழிசைக்கு அவர் ஆற்றிய தொண்டு அளப்பதற்கரியது . இசை பற்றியஅரிய ஓலைச் சுவடிகளைச் திரட்டினார் . கீதம் , வர்ணம் முதலியவற்றைத் தமிழில் கற்பிக்க வற்புறுத்தினார் .
இசை மாநாடுகளைத் தஞ்சையில் தொடர்ந்து தம் சொந்த செலவில் நடத்தினார் . வறுமையில் வாடிய இசைக் கலைஞர்களுக்கு உதவி புரிந்தார் .
இசை பற்றிய நூல்கள் வெளியிட அச்சகம் ஒன்றையும் தஞ்சையில் நிறுவினார் .
இவரது ” கருணாமிர்த சாகரம் ” எனும் நூல் அரிய இசைத் தமிழ் நூலாக விளங்குகிறது .
தமிழிசை மரபை சிலப்பதிகாரம் தொடங்கி தற்காலம் வரை ஆய்ந்து அவற்றின் நுட்பங்களை விளக்கிய பெருமை பண்டிதருக்கு உண்டு . *’ நன்மறை காட்டும் நன்நெறி ‘* எனும் நூலில் விவிலிய நெறிகளை எளிய முறையில் பண்டிதர் விளக்கியுள்ளார் .
இசைத் தமிழ் வித்தகரான ஆபிரகாம் பண்டிதரின் அரிய கீத்தனை ஒன்று கிறித்தவ வழிபாட்டில் நீங்காத இடம் பெற்றுள்ளது .
கிறிஸ்த்து பிறப்பு விழாக்களில் பாடப்படும் அந்தப் பாடலின் பல்லவி அனுபல்லவி ஒரு சரணம் பின்வருமாறு :
பல்லவி
கண்டேனென் கண் குளிர – கர்த்தனையின்று
அனுபல்லவி
கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்கி – கண்
சரணம்
அண்டினோர்க் – கன்புருவாம் ஆரணனை
கண்டோர்கள் – கலிதீர்க்கும் காரணனை பூரணனைக் – கண்
Credit: Manna Selvakumar, Tinnevelly Christian Historical Society
