தஞ்சாவூர் மாவட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் !
✯ கி.பி.1866 மே 9 ஆம் தேதி ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது தான் தஞ்சாவூர் நகராட்சி. கி.பி.1983-ம் ஆண்டு தமிழக அரசால் சிறப்புநிலை நகராட்சியாகவும், மேலும் 2014 ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி தஞ்சாவூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
தஞ்சாவூர் வரலாறு :
✯ தஞ்சாவூர் பழம் பெருமை வாய்ந்த பகுதிகளில் ஒன்றாகும். 12 ஆம் நு}ற்றாண்டு வரை ஆட்சி புரிந்த சோழர்கள், தங்கள் ஆட்சி காலத்தில் 90 கோவில்களை கட்டியுள்ளனர். 16, 17 மற்றும் 18 நூற்றாண்டுகளில் நாயக்கர்கள் மற்றும் மராத்தியர்கள் ஆட்சி புரிந்த போதிலும் சோழர்களின் காலம் பொற்காலம் என அழைக்கப்படுகிறது. எல்லாருடைய ஆட்சி காலத்திலும் தஞ்சையே தலைநகராக இருந்துள்ளது.
தஞ்சாவூர் சிறப்பு :
✯ தஞ்சாவூர் மாவட்டம் விவசாயத்திற்கு பெயர் பெற்றதாகும். காவிரி நதியால் நெற்பயிர்களும், தென்னை மரங்களும், மாந்தோப்புகளும் செழித்து வளர்கின்றன. தமிழகத்தின் பிற மாவட்டங்களை விட இங்கு நெல் உற்பத்தி அதிகம் என்பதால் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் நெல் உற்பத்தியில் தஞ்சாவூர் முதலிடம் வகிக்கிறது.
தஞ்சை பிரகதீசுவரர் கோவில் :
✯ இக்கோவில் பெருவுடையார் கோவில் என்றும் தஞ்சை பெரிய கோவில் என்றும் அழைக்கப்படும். இக்கோவில் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இக்கோவில் உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் அமைப்பானது பண்டைய தமிழர்களின் நுட்பமான கட்டடக்கலையை காட்டுகிறது.
✯ இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே வைத்து கோவில்கள் கட்டப்பட்டு கொண்டிருந்த அக்காலத்திலேயே இக்கோவில் 15 தளங்களைக் கொண்டு சுமார் 60 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செதுக்கப்பட்டது ஆகும். இதன் உயரம் 14மீ, நீளம் 7மீ, அகலம் 3மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சரசுவதிமகால் நூலகம் :
✯ உலகில் உள்ள தொன்மையான நூலகங்களில் ஒன்றாக உள்ளது தஞ்சை சரஸ்வதி மகால் நு}லகம். இந்த நூலகம் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டு பின்னர் நாயக்கர் மன்னர்கள் மற்றும் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களாலும் வளர்ச்சிப்பெற்றது.
✯ கல்வெட்டுகளில் கிடைத்துள்ள ஆதாரங்களின்படி முதலில் இந்நூலகம் சரசுவதி பண்டாரகம், புத்தகப்பண்டாரம் என அழைக்கப்பட்டுள்ளது. இந்நூலகத்தில் பணியாற்றிவர்களை சரசுவதி பண்டாரிகள் என அழைக்கப்பட்டனர்.
✯ இத்தில் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இலத்தீன், கிரேக்கம் முதலிய பலமொழிகளிலுள்ள ஓலைச்சுவடிகளும், கையெழுத்துப்பிரதிகளும், அச்சுப்பிரதிகளும் உள்ளன. இந்நூலகத்தில் சுமார் 25,000 சமஸ்கிருத நூல்கள் உள்ளன. அதுமட்டுமின்றி 400 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ‘நந்திநாகரி” என்னும் எழுத்து வடிவத்தில் உள்ள சுவடிகளும் இங்கு உள்ளன.
✯ கி.பி. 1703-ல் ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட ‘சீவகசிந்தாமணி” நூல் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. பிரெஞ்சு ஆசிரியர் ஒருவரால் எழுதப்பட்ட ‘சாமுத்திரிகா” என்ற அரியநூல் ஒன்றும் இந்நூலகத்தில் உள்ளது.

