ஆர் இவர் ஆராரோ – கிறிஸ்துமஸ் பாடல் பிறந்தகதை

கிறிஸ்துமஸ் பாடல் பிறந்தகதை ஆர் இவர் ஆராரோ – இந்த – அவனியோர் மாதிடமே*
பாடல் : வே. மாசிலாமணி
ராகம் : வே. மாசிலாமணி
இந்துப் பின்னணியிலிருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட குடும்பத்தின் மூன்று சகோதரர்களும், தங்களை ஆண்டவரின் ஊழியத்திற்கு அர்ப்பணம் செய்து, ஆண்டவரின் ஊழியத்திற்கு அர்ப்பணம் செய்து, திருச்சபையைக் கட்டும் போதகர்களாக, முழுநேரப்பணியில் ஈடுபட்டார்கள் என்பது வியக்கத்தக்கதல்லவா? இப்படிப்பட்ட குடும்பத்தின் மூத்த சகோதரராக விளங்கியவரே வே. மாசிலாமணி ஐயராவார். அவரது இளைய தம்பி வே. சந்தியாகு ஐயரும், சிறந்த பாடலாசிரியர் மற்றும் இசை வல்லுனர் என்பதை நாம் அறிவோம்.
மாசிலாமணி ஐயர் திருப்புவனம் என்ற சிற்றூரின் போதகராகப் பணியாற்றிய நாட்களில், இந்தக் பாடலை எழுதினார். ஆண்டவரின் புகழை, அனைவரும் அறியும் வண்ணம், அவரைப் போற்றிப் பாட, திருச்சபையாகிய கன்னியரை அழைப்பதாக, இப்பாடலை மாசிலாமணி எழுதியிருக்கிறார். சிறந்த வயலின் வித்துவானாகிய மாசிலாமணி, தனது பாடல் மற்றும் இசைத் தாலந்துகளை, நற்செய்திப் பணிக்கென முழுவதுமாக அர்ப்பணித்துச் செயல்பட்டார்.
திருவண்ணாமலையின் வாரச் சந்தை நாட்களில், மாசிலாமணி தன் நண்பர்களுடன் அங்கு சென்று இசைக்கச்சேரி நடத்துவார். அப்போது அவரின் பாடலையும் இசையையும் கேட்க, சந்தைக்கு வந்த மக்கள் கூட்டமாகக் கூடுவார்கள். அவர்களுக்கு நற்செய்தியைப் பக்குவமாகப் பாடல்கள் வழியாக அவர் எடுத்துக்கூறி, ஆண்டவரின் அன்பால் அவர்களைக் கவர்ந்திடுவார்.
மாசிலாமணி எழுதிய *“ஆர் இவர் ஆராரோ”* என்ற கிறிஸ்மஸ் பாடலும், “வந்தனம் வந்தனமே”, மற்றும் “ஆனந்தமே ஜெயா ஜெயா” என்ற புத்தாண்டுப் பாடல்களும், கிறிஸ்தவ சமுதாயத்திற்கு பண்டிகைகளின் மகிழ்ச்சியைக் கூட்டித் தரும் பிரபலமான பாடல்களாக விளங்குகின்றன. கருத்துச் செறிவுடன் விளங்கும் இப்பாடல்கள், நுற்றாண்டு காலமாய், திருச்சபை மக்களனைவரும் விரும்பிப் பாடும் பாடல்களாகத் திகழ்கின்றன. இப்பாடல்கள் பிரபலமாவதற்கு, அவர் அமைத்த சிறந்த இசைப்பண்களும் காரணமாகும். இசையும் பாடலின் சொல்லடுக்கும், அருமையாக இணைந்து வருவதை, “ஆனந்தமே ஜெயா ஜெயா,” என்ற பாடலைப் பாடி மகிழ்வோர் நன்கு அறிவர்.
*ஆர் இவர் ஆராரோ*
பல்லவி
ஆர் இவர் ஆராரோ – இந்த – அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத
பாலகனார் ?
சரணங்கள்
1. பாருருவாகுமுன்னே – இருந்த – பரப் பொருள் தானிவரோ ?
சீருடன் புவி , வான் , அவை பொருள் யாவையுஞ் சிருட்டித்த
மாவலரோ ? — ஆர்
2. மேசியா இவர்தானோ ? – நம்மை – மேய்த்திடும் நரர்கோனோ ?
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள
மனசானோ ? — ஆர்
3. தித்திக்குந் தீங்கனியோ ? – நமது தேவனின் கண்மணியோ ?
மெத்தவே உலகிறுள் நீக்கிடும் அதிசயமேவிய விண்
ணொளியோ ? — ஆர்
4. பட்டத்துத் துரைமகனோ ? – நம்மைப் – பண்புடன் ஆள்பவனோ ?
கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டிடுந்
தாயகனோ ? — ஆர்
5. ஜீவனின் அப்பமோதான் ? – தாகம் தீர்த்திடும்பானமோதான் ?
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல மானவர்
இவர்தானோ ? — ஆர்
————————————————————
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது …
*மன்னா செல்வகுமார்*
Credit – Manna Selvakumar – *Tinnevelly Christian Historical Society*
