சாயர் கொடுத்த சாயர்புரம்
திருவைகுண்டம் தாலுகாவில் பெருங்குளம் என்று ஒரு ஊர். பெருங்குளம் ஊருக்கு வடபுறம் சுப்பிரமணியபுரம் உள்ளது. சுப்பிரமணியபுரம் ஊருக்கு வடபுறம் ஒர் அடர்ந்த காடு இருந்தது. அந்தக் தேரிக்காட்டுப்பகுதி வடக்கே புதுக்கோட்டை வரை நீண்டிருந்தது. இத்தேரிப்பகுதியில் 6000 வருடங்களுக்கு முன் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியின் கீழ் பக்கமாக சிவஞானபுரம் சிவத்தையாபுரம் ஆகிய ஊர்கள் இருந்தன. சுப்பிரமணியபுரத்துக்கு கிழக்கே அன்றைய துறைமுகமான கொற்கை இருந்தது. அதற்கு தெற்கே ஏரல் இருந்தது. 1815க்கு முன்பே இப்பகுதியில் கிறிஸ்தவம் ஒரளவு பரவியிருந்தது. சிலர் கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டிருந்தனர். ஆனால் கிறிஸ்தவத்தை தழுவியவர்களுக்கு கடும் எதிர்ப்பு இருந்தது. கிறிஸ்தவர்கள் அவர்களின் ஊர்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டனர்.
அங்கு கிறிஸ்தவர்களின் நிலை பரிதாபமாக இருந்தது. அவர்கள் வசிக்க வீடுகள் இல்லை. அந்தப் பரிதாப நிலையைப் போக்க ஒரு ஐரோப்பியர் முன் வந்தார். அவர்தான் சாமுவேல் சாயர். கிழக்கிந்திய கம்பெனியின் கடல் படையில் சாமுவேல் சாயர் என்பவர் உயர் பதவியில் இருந்தார். அந்த சாமுவேல் சாயர் என்பவருக்கு கப்பல் பிரயாணத்தின்போது 11.09.1776ல் ஒரு மகன் பிறந்தான். அந்தக் குழந்தைக்கும் சாமுவேல் சாயர் என்றே பெயரிட்டார்கள். 25.10.1778ல் தஞ்சாவூரில் சாமுவேல் சாயருக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. சாமுவேல் சாயரின் 24வது வயதில் 1800ம் ஆண்டு; சாயர் குடும்பம் பாளையங்கோட்டை கோட்டைக்கு இடம் பெயர்ந்தது.
சாமுவேல் சாயர் வணிகர் தான். எனினும் பெரும் செல்வந்தர் அல்ல. அவருக்கும் மனைவி மக்கள் இருந்தனர். திருவைகுண்டம் பகுதியில் கிறிஸ்தவ மக்கள் வீடு வாசல் இல்லாமல் துயரப்படும் விஷயம் சாமுவேல் சாயருக்கு தெரிய வந்தது. எனவே அவர்கள் குடியிருக்க நிலம் வாங்கிக் கொடுக்க முடிவு செய்தார். சுப்பிரமணியபுரம் ஊருக்கு வடபுறம் அடர்ந்த வனப்பகுதியில் 150 ஏக்கர் நிலப்பரப்பை விலைக்கு வாங்கி SPCK சபையிடம் 1810ஆம் ஆண்டு நன்கொடையாகக் கொடுத்தார். கிறிஸ்தவர்கள் SPCK சபையிடம் இலவசமாக மனை பெற்று அதில் குடியிருக்க வேண்டும் என்பது சாமுவேல் சாயரின் ஆசை. அப்போது சாமுவேல் சாயரின் வயது 39 தான். அவரது மனைவி கருவுற்றிருந்த நேரம் அது. அந்தோ பரிதாபம்! திடீரென ஏற்பட்ட நோய் காரணமாக 18.11.1815ல் அவர் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். கிறிஸ்தவர்கள் குடி ஏற இடம் வாங்கிக் கொடுப்பதற்காகவே கர்த்தரால் அனுப்பப்பட்டவர் போலும்.
சாமுவேல் சாயர் விலைக்கு வாங்கிக் கொடுத்த வனப்பகுதி சுப்பிரமணியபுரம் ஓடைக்கு வடபுறமாக இருந்தது. சாயரின் கனவு நனவாயிற்று. ஓடைக்கு வடபுறமாக காடுகளை அழித்து நிலமாக்கி 1814ம் ஆண்டு; ஒரு சில கிறிஸ்தவர்கள் குடியேறினர். அவை ஓலையால் வேயப்பட்ட குடிசை வீடுகள். புதிதாக முளைத்த அவ்வூருக்கு மக்கள் சாமுவேல் சாயரின் நினைவாக சாயர்புரம் என பெயர் சுட்டி மகிழ்ந்தனர். சாயர் விலைக்கு வாங்கி கொடுத்த 150 ஏக்கர் நிலம் இருந்ததினால்தான்; தான் நினைத்தபடி கல்விக்கூடங்களையும் கிராமத்தையும் நேர்த்தியாக நிர்மாணிக்க முடிந்ததாக 1842ல் சாயர்புரத்திற்கு மிஷனரியாக வந்து கல்விப்பணியையும் சமயப்பணியையும் தனது இரு கண்களாகக் கொண்டு சாயுர்புரத்தை கல்விபுரமாக மாற்றிய Dr.G.U.போப் தனது குறிப்பில் தெரிவித்துள்ளார்.1849ல் Dr.G.U போப் சாயர்புரத்தை விட்டு சென்றபின் Rev.M.Rose, Rev.H.C.Huxtable, Rev.J.Brotherton, Rev.J.Earnshaw, Rev.R.J.French, Rev.J.Graitton, Rev.J.Adamson, Rev.J.A.Sharrock, Rev.A.J.Godden, Rev.P.G.Kerslake, Rev.W.E.Evans போன்ற மேலை நாட்டு மிஷனரிகள் 1937ம் ஆண்டுவரை இங்கிருந்து பணி செய்ததின் விளைவாக சாயர்புரம் கிராமம் பல இலட்சம் மக்களின் கல்விக்கண் திறந்துள்ளது.
இன்றும் தினமும் சுமார் 4500க்கும் அதிகமான மாணவ மாணவிகள் சாயர்புரத்திற்கு வந்து கல்வி கற்று செல்கின்றனர். சாமுவேல் சாயர் என்ற மாமனிதரின் மனமுவந்த ஈகையை சாயுர்புரம் கிராமக் குடியேற்றத்தின் 200வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் இச்சமயத்தில் சாயர்புரம் நன்றிப்பெருக்கோடு நினைவுகூர்கிறது. சாயர்புரத்தை மேம்படுத்த அயராது உழைத்த மேலைநாட்டு மிஷனரிமார்களும் அவர்களுடன் இணைந்து ஒத்துழைத்த உபதேசிமார்களும் அவ்வூர்களின் மக்களும் என்றென்றும் போற்றுதற்குரியவர்கள். வாழ்வில் ஒரு முறையாவது அவ்வூரின் மண்ணை மிதித்துப் பாருங்கள். மெய் சிலிர்த்துப் போவீர்கள்.

