மெல்கிசேதேக்கு

மெல்கிசேதேக்கு
பரிசுத்த வேதாகமத்தில் மெல்கிசேதேக்கைக் குறித்து ஆதியாகமத்திலும் (ஆதி 14:18-20), சங்கீதத்திலும் (சங் 110:4), எபிரேய (எபி 7:1-20) நிருபத்திலும் கூறப்பட்டுள்ளது.
மெல்கிசேதேக்கு சாலேமின் இராஜா என்று எழுதப்பட்டிருப்பதினால் இவர் சாலேமில் அரசாண்ட ஒரு மனுஷன் என்றும், இவர் கர்த்தராகிய இயேசுவுக்கு முன்னடையாளமான ஒரு மனுஷன் என்றும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஆனால் எபிரேயர் 7:1-7 வரையிலான வசனங்களிலுள்ள ஒவ்வொரு விஷயத்தையும் நாம் கவனமாக ஆராய்ந்தால் இவர் யார் என்பதை தெளிவாக விளங்கிக்கொள்ளலாம். இவரைக் குறித்து கூறப்பட்டிருப்பவற்றை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
- மெல்கிசேதேக்கு (நீதியின் இராஜா)
- சாலேமின் இராஜா (சமாதானத்தின் இராஜா)
- உன்னதமான தேவனுடைய ஆசாரியன்
- தகப்பனும், தாயும், வம்சவரலாறும் இல்லாதவர்
- நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமற்றவர்
- தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவர்
இவர் சாலேமின் இராஜா என்று எழுதப்பட்டிருப்பதினால் சாலேம் என்ற இடத்தை அரசாண்ட ஒரு இராஜா என்று சிலர் வியாக்கியானப்படுத்துகின்றனர். ஆனால் சமாதானத்தின் இராஜா என்று அதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளபடியால் சாலேம் என்பது ஒரு இடமாக இருக்கமுடியாது. பழைய ஏற்பாட்டின் காலத்தில் ஒருவன் இராஜாவாயிருந்தால் அவன் ஆசாரியனாயிருக்க முடியாது, ஆசாரியனாயிருந்தால் அவன் இராஜாவாயிருக்க முடியாது. இது, மெல்கிசேதேக்கு பூமிக்குரிய இராஜாவாகவும் பழைய ஏற்பாட்டின் ஆசாரியனாகவும் இருக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துகிறது.
- தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாத இவர் இப்பூமியில் பிறந்த வம்சவரலாறு உடைய எந்த ஒரு மனிதனாகவும் இருக்க முடியாது. தகப்பனும் தாயும் இல்லாத ஆதாமாகவும் இருக்கமுடியாது. ஏனெனில் ஆதாமுக்கு வம்சவரலாறும், நாட்களின் துவக்கமும் உண்டு.
- நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமில்லாதவர் என்பதிலிருந்து இவர் தேவதூதராகவும் இருக்க முடியாது. ஏனெனில் தேவதூதர்களுக்கு நாட்களின் துவக்கம் உண்டு.
- தேவதூதராகவோ, மனிதனாகவோ, அல்லது சிருஷ்டிக்கப்பட்ட வேறெந்த சிருஷ்டியாகவோ இருக்க முடியாது என்பதிலிருந்து அவர் தேவனாகத்தான் இருக்க முடியும் என்பது தெளிவாகிறது.
- அவர் தேவனென்றால், உன்னதமான தேவனுடைய ஆசாரியன் என்று சொல்லப்பட்டிருப்பதினிமித்தம் அவர் அவர் பிதாவாகிய தேவன் அல்ல என்று வெளிப்படுகிறது.
- தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவர் என்பதிலிருந்து இவர் குமாரனாகிய கிறிஸ்துவும் அல்ல என்று வெளிப்படுகிறது.
அப்படியானால் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமில்லாதவரான மெல்கிசேதேக்கு யார்? தேவனுடைய திரித்துவத்தின் மூன்றாவது ஆள்தத்துவமாகிய பரிசுத்த ஆவியானவரே இந்த மெல்கிசேதேக்கு.
நீதியும் சமாதானமும்
நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினாலுண்டாகும் தேவராஜ்யத்தின் அம்சங்களாயிருக்கிறபடியால் (ரோமர் 14:17) பரிசுத்த ஆவியானவர் (மெல்கிசேதேக்கு) நீதியின் இராஜா என்றும் சமாதானத்தின் இராஜா என்றும் அழைக்கப்படுகிறார்.
நித்திய ஆவி
மெல்கிசேதேக்கை குறித்து குறிப்பிடத்தக்க வேறொரு காரியம் என்னவென்றால், பிரதான ஆசாரியனுடைய ஊழியமன்றி எந்தப் பலியும் செலுத்தப்படவோ அங்கீகரிக்கப்படவோ முடியாது. மனுஷனின் மீட்புக்காக கிறிஸ்துவானவர் தம்மை ஒரு பூரண பலியாக ஒப்புக்கொடுத்தபோது, அந்தப் பலியில் ஊழியஞ்செய்ய ஒரு பிரதான ஆசாரியன் எழும்ப வேண்டியது அவசியமாயிருந்தது. கர்த்தராகிய இயேசுவின் பலியில் ஊழியஞ்செய்த பிரதான ஆசாரியன் யார்?
“நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்து…” என்று எபிரெயர் 9:14 –இல் கூறப்பட்டிருப்பதின்படி, அப்பலியில் ஊழியம் செய்தது பரிசுத்த ஆவியானவரே ஆவார்.
மெல்கிசேதேக்கின் முறைமை
மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான ஆசாரியத்துவமானது புதிய ஏற்பாட்டு ஆசாரிய ஊழியமாயிருக்கிறது, இதற்கு கர்த்தராகிய இயேசு பிரதான ஆசாரியராகவும் (எபிரெயர் 7:1-17) மாம்ச சம்பந்தமான எல்லா உறவு முறைகள் உட்பட தங்களுக்குண்டான எல்லாவற்றையும் வெறுத்து விட்டு அவரை பின்பற்றுகிற புதிய ஏற்பாட்டு தேவ ஊழியர்கள் உடன் ஆசாரியர்களாகவும் இருக்கிறார்கள். புதிய ஏற்பாட்டு ஊழியமானது மெல்கிசேதேக்கின் முறைமையின்படியே கட்டியெழுப்பப்படுகிறது.
அந்த ஆசாரியத்தின்படியான ஊழியமும் ஜீவியமும் ஒருவனை பரலோகத்தின் திரைக்குள் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்கச் செய்கிறது (எபி 6:18-20).
